Job 8

1அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: 2நீர் எதுவரைக்கும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்? 3தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ?

4உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தாலும் அவர்களுடைய பாவத்தின் தண்டனைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும், 5நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பம்செய்து,

6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார். 7உம்முடைய ஆரம்பம் சாதாரணமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.

8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். 9நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. 10அவர்கள் உமக்கு போதித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ?

11சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? 12அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைவிட சீக்கிரமாக வாடிப்போகும் அல்லவோ?

13தேவனை மறக்கிற எல்லோருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோகும். 14அவனுடைய வீண் எண்ணம் வீணாகப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சியின் வீடுபோலிருக்கும். 15ஒருவன் அதின் வீட்டின்மேல் விழுந்தால், அது நிலைக்காது, அதைப் பிடித்தால், அது நிற்காது.

16வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவனுடைய தோட்டத்தின்மேலே படரும்; 17அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும். 18அது அதினிடத்தில் இல்லாமல் அழிந்தபின், அது இருந்த இடம் உன்னை நான் பார்த்ததில்லையென்று மறுதலிக்கும்.

19இதோ, அவனுடைய வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே ஆட்கள் அந்த இடத்திலிருந்து எழும்புவார்கள். 20இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.

21இனி அவர் உம்முடைய வாயைச் சிரிப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.

22

Copyright information for TamULB